Saturday, December 10, 2011

இளஞ்சேட்சென்னி

பண்டைத் தமிழகத்தில் இருந்த சோழநாட்டின் மன்னர்களுள் ஒருவன். இவன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்றும் அழைக்கப்படுகிறான். கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவன் ஆதலால் இவன் முற்காலச் சோழ அரசர்கள் வரிசையில் உள்ளவன். இம் மன்னனைப் பற்றிக் கிடைக்கப்பெற்ற தகவல்கள் சங்க இலக்கிய நூல்களிலிருந்து கிடைக்கப் பெற்றவையே. புறநானூற்றிலும், அகநானூற்றிலும் இவனைப் பற்றிய பாடல்கள் உள்ளன. புறநானூற்றில், கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும், பரணர் என்னும் புலவரும், கழாத்தலையார் அல்லது பெருங்குன்றூர் கிழார் என்பவரும் இவனைப்பற்றிப் பாடியுள்ளனர்.

கொடையிலும், போர்த் திறத்திலும் புகழ் பெற்றிருந்தான். வம்பர், வடுகர் ஆகியோரை முறியடித்தவன் என இவனைப் பற்றி அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம் மன்னனுடைய குதிரைப் படை, யானைப் படை என்பன பற்றிய குறிப்புக்களைத் தருகின்ற புறநானூற்றின் நான்காம் பாடல், அவன் குதிரைகள் பூட்டிய தேரில் வரும் காட்சியை சிவந்த சூரியனுக்கு உவமையாகக் கூறுகின்றது.

இவன், அழுந்தூர் வேளிர் குல இளவரசி ஒருத்தியை மணந்தான். இவ்விருவருக்கும் பிறந்தவனே, முற்காலச் சோழர்களுள் புகழ் பெற்றவனும், கூடுதலாக அறியப்பட்டவனுமான கரிகால் சோழன். கரிகாலன் தாய் வயிற்றில் இருக்கும்போதே இளஞ்சேட் சென்னி இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்புகள்
  1. புறநானூறு நான்காம் பாடல்
  2. புறநானூறு 266 ஆம் பாடல்
  3. அகநானூறு 375 ஆவது பாடல்: .....எழாஅத் திணிதோள் சோழர் பெருமகன் விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி குடிக்கடன் ஆகலின் குறைவினை முடிமார் செம்புஉறழ் புரிசைப் பாழி நூறி வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக்.....
உசாத்துணை நூல்கள்
  • அகநானூறு, மதுரைத் திட்ட மின்பதிப்பு
  • புறநானூறு, புலியூர்க் கேசிகன் தெளிவுரை, பாரி நிலையம், சென்னை, 1958, மறுபதிப்பு 2004.
  • கனகசபை வி., 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம், அப்பாத்துரையார் கா. (தமிழாக்கம்), வசந்தா அதிப்பகம், சென்னை, 2001.
  • செல்லம் வே. தி., தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1995, மறுபதிப்பு 2002.

No comments:

Post a Comment